Friday, 1 April 2011

சித்தன் - 3


ஆன்மா அறிவுடயதாயினும், தானாக அறியும் அறிவற்றது என்பர்.  கதிரவனது ஒளியினால் அக்கதிரவனைகாணுதல் போல இறைஅறிவு உணர்ந்த உணரும் அறிவே ஆன்மாவின் அறிவாகும்.  ஆதலின் அப்பெரறிவினைப் பெறுவது சித்து எனவும், அவ்வறிவினைப் பெற்றவன் சித்தன் என்று அழைக்கப்பட்டனர்.

சாலோகம், சாம்யம், சாரூபம், சாயூஜ்யம் என்னும் நான்கும் நான்கு வகை முக்த்திகள்.  இதில் சயூச்சியமே பரமமான முத்தி.  ஏனைய மூன்றும் பத முத்தி  என்பர்.  இப்பதமுத்திகள் துன்பம் தருவன.  மீண்டும் பிறப்பிற்கு ஆளாக்குபவன.  மாய காரியப் பொருள் பாசம்.  இதற்க்கு மூலம் ஆணவ வல்லிருள் என்பதை உணர்ந்து, அவற்றைத் துறந்து ஆணவத்தால் விளையும் மதமற்று, யான் எனது என்னும் செறுக்கற்று  அவை அனைத்தையும் அருள் நினைவால் மாற்றி அப் பேரறிவுப் பெருங்கருணைப் பொருளோடு இணையும் நிலை பெற்றவர் சிவ சித்தராவர் என்கிறார் திருமூலர்.

சாத்திரத்தைச் சுட்டெரித்தால் அவனே சித்தன் - அகத்தியர்
எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி
ஏகாமல் வாசனையை அடித்தான் சித்தன் - சட்டை முனி
தாக்கோண விட்ட குறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்தனாமே - ராமதேவர்  

சக்திக்கு சித்தை என்ற பெயரும் உண்டு.  வாழை என்பதைப் பெண்ணாகக் கொண்டால் சக்தியைக் குறிப்பதாகக் கொண்டால் சித்தையை வணங்குபவன் சித்தன் எனலாம்.  பொதுவாகச் சித்தர் பாடல்களில் வாலை வணக்கமும் காணப்படுகிறது.  எனவே, இவர்கள் சக்தி வழிபாடு செய்பவர்கள் என்பது தெரிகிறது.

ஆத்தாளை பூசித்தொனே சித்தன் - கருவூரார்

சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்சான, ரசாயன ஆராய்ச்சியாகும்.  உலோகங்கள், உப்புகள், பாஷாணங்கள், வேர்கள், இலைகள், விதைகள், பட்டைகள், பூக்கள், முத்து, பவழம் மற்றும் பல கடல் படு பொருட்கள், விலங்குகளின் உடலிலிருந்து கிடைக்கும், கஸ்தூரி, மூத்திரம், சாணம் முதலியவற்றின் குணங்களை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.  அவற்றின் நோய் தீர்க்கும் பண்புகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.

எதெதை எப்படி சேர்த்தால் என்ன மருந்து கிடக்கும், எந்த நோய்க்கு எந்த மருந்து , நுகரும் மருந்து, பூசும் மருந்து, குடிக்கும் மருந்து எனப் பலவகையான மருத்துவ ஆய்வுகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.